0001. அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ( அதிகாரம் : கடவுள் வாழ்த்து குறள் எண் : 1 ) பொழிப்பு (மு வரதராசன்): எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன . அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது . மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன . அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து திருக்குறள் ( மூலமும் உரையும் ) ஞா . தேவநேயப் பாவாணர் அறத்துப் பால் பாயிரவியல் அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து அஃதாவது , ஆசிரியன் தான் இயற்றும் நூல் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டும் , தன் நூலிற்கு வேண்டிய தெள்ளிய அறிவை அறிவிற்குப் பிறப்பிடமாகிய இறைவனிடத்தினின்று பெறற்பொருட்டும் , இறைவனருள் உலக நடப்பிற்கு இன்றியமையாத முதற்கரணமாதலின் அதைத் தேடுதற்கு எல்லா மாந்தரும் எவ்வினையையும் இறைவனைத் தொழுதே தொடங்கல் வேண்டும் என்னும் நெறிமுறையை உலகிற்கு உணர்த்தற் பொருட்டும் , இறைவனை வழுத்துதல் . வழுத்துதல் - போற்றுதல் . துதித...